மெல்லிய பயணம்-1
பெண்மையே அழகு!அதிலும் அழகிய பெண் என்றால் மென்மையும் கர்வமும் சேர்ந்து இருக்கும்.அந்த மென்மையும் கர்வமும் அழகும் ஆண்டவன் என்னிடம் அதிகமாகவே படைத்துவிட்டான்."பயணம்" - என் வாழ்க்கையின் பெரும் பாதி. எனக்கு சுவாசம் போன்றது. பலருக்கும் என் மீது நாட்டம் உண்டு. ஆண்களுக்கு என்னை பிடிக்கும் என்பதால் என்னை பிடித்து வைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் கைகளில் சிக்காமல் இந்த உலகை ரசிக்கிறேன். என் அழகிய வாழ்க்கையை காற்றின் திசை நோக்கி வாழ்கிறேன்
எல்லோரும் என்னைத் தேடி வர, நான் தேடிச் செல்வது பூக்கள். பெண்களே பூக்கள்தான்.பூவைப் பிடிக்காத பாவை உண்டோ! பூக்களிடம் ரகசியம் பேசுவதும், காதல் சொல்வதும் எனக்கு மட்டுமே தெரிந்த அழகிய கலை.அப்படிச் சென்ற என் வாழ்க்கைப் பயணத்தில், அவரை அந்த நிலையில் கண்டது என்னை தலை சுற்ற வைத்தது.சென்ற பயணத்தில் அகிலன் என்ற அழகனை சந்தித்தேன்.ஆண்மை, கம்பீரம், எளிய பேச்சு,இனிய குரல்,வசீகரம் என அனைத்தையும் அவரிடம் கவனித்தேன்.ஒரு கனம் அகிலனின் தோள் சாய ஆசைக் கொண்டேன்.ஏதோ ஒரு பயம்.அதனால் விலகி நின்றே அவரைக் கண்டேன்.அகிலன் பெண்களை மதிப்பவர்.கல்லம் இல்லாத உள்ளம் கொண்டவர்.அத்தகைய வெள்ளை உள்ளத்தில் அவர் பதித்த ரோஜாவின் பெயர் யாழினி.
அவரின் ஒவ்வொரு செயலும் யாழினியை கவரும் நோக்கத்தோடு இருப்பதை உண்ர்ந்தேன். யாழினி அவர் வீட்டு முதலாளியின் மகள். நீல விழிகள்,கார்மேகக் கூந்தல்,சிறகு போன்ற ஸ்பரிசம்,பேச்சில் அடக்கம் என தேவதையாக காட்சி அளிப்பவள். வீதியில் நடந்தால், கருவிழிக்கும் கால் கட்டை விரலுக்கும் கோடு போட்டுக்கொண்டு நடப்பவள்.பலர் கண்கள் இவள் மீது பட்டாலும், இவள் விழிகள் எவருக்கும் தரிசனம் தந்தது இல்லை.அந்த பலர் வரிசையில் அகிலனும் ஐக்கியமானான்.அகிலன் யாழினி இணைய வேண்டும் என்று இறைவனை வேண்டினேன்,அகிலனின் நலம் விரும்பியாக.பிறகு, அதை நின்று கவனிக்க நேரம் இன்றி, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
இன்று நான் கண்ட காட்சி! 'அது அகிலன் தானா?', என்று என்னை திடுக்கிடச் செய்தது.இடிந்துபோன இரட்டை கோபுரமென ஒடிந்த மேனி, முகத்தில் தாடி,அன்று சிவந்திருந்த இதழ்கள், இன்று சிகரெட்டின் விளையாடலில் கருகிப்போயிருந்தது.அந்த காந்த கண்களில் நீர் கோலம் இருந்தது. அகிலனிடம் பேசும் நிலையில் நான் இல்லாததால், என் ஆசை பூக்களிடம் வினவினேன்.பூக்கள் சொன்ன கதை நான் எதிர்பார்த்ததுவே! ஆம்! சரியாக யோசிக்கிறீர்கள்!அகிலனுக்கு காதல் தோல்வி.அவர் காதல் யாழினிக்கு தெரியும் முன்பே, யாழினியின் திருமண பத்திரிக்கை அகிலன் கைகளுக்கு கிடைத்தது.அழகு,அறிவு,பணம்,திறமை எல்லாம் இருந்தாலும், வாழ்க்கையின் தேடல் சந்தோஷம் காண்பதே.அத்தகைய சந்தோஷமான வாழ்க்கையை யாழினி இல்லாது வாழ முடியாது என்று நினைத்து தன்னைத் தானே அழித்துகொண்டு இருகிறான்.
அன்று அகிலனைக் கண்டபோது எனக்குள் வராத தைரியம், இன்று வந்தது.அகிலனை நோக்கி விரைந்தேன்,பறந்தேன்.அவர் மீது இருந்த மது நாற்றம் என்னைத் தாக்கியது.இருப்பினும் அவர் தோள்களில் படர்ந்தேன்,தட்டிக்கொடுத்தேன்.அந்த நிலையில் அகிலனுக்கு அது தேவைப்பட்டது.அவர் பாசத்தோடு என்னை நோக்கினார்.எனது மெல்லிய சிறகுகளை தடவிக் கொடுத்தார்.தன் தோள்களில் இருந்த என்னை, ஆள்காட்டி விரலில் ஏந்தி, தன் சோகமெல்லாம் மறந்து என் மென்மையில் சொக்கிவிட்டார்.மீண்டும் அவள் நினைவுகள் தாக்கவே, என்னைப் பறக்க விட்டு,தேய்பிறையென முகத்தில் சோகம் தெளித்துக் கொண்டார்.
மீண்டும் பூக்களிடம் வந்து, அவற்றின் காதுகளில் நிம்மதியாக ஓதினேன்."பார்த்தாயா! நான் பட்டாம்பூச்சி என்றாலும், என்னால் அகிலனுக்கு ஆறுதல் தர முடிந்தது". பூக்கள் சிரித்தன.தென்றல் பாராட்டியது.அந்த பாராட்டு கீதத்தோடு என் இனிய பயணம் தொடர்ந்தது. அழகிய என் சிறகுகள் விரித்தேன்.ஆண் பட்டாம்பூச்சிகளைக் கண்டால் தலைகுனிந்தும்,பூக்களைக் கண்டு புன்னகைபுரிந்தும், தென்றலுக்கு முத்தமிட்டும், எனது மெல்லிய பயணம் தொடர்கிறது...
கதை-1
'அகிலன்'- தமயந்தி,காமராஜ் தம்பதியர் திருமணத்திற்கு எட்டு வருடம் கழித்து பிறந்த தவப்புதல்வன்.பெயரிற்கு ஏற்றார்போலவே காமராஜின் குணமும் மனமும் அமைந்திருந்தது.அழகில் தாயையும் அறிவில் தந்தையையும் அச்சாக்கிக் கிடைத்தவன்தான் அகிலன். தன்னோடு படிக்கும் சிறுவர்கள் அனைவரும் கபடி, கிரிக்கெட் என ஆர்ப்பாட்டமாக இருந்தாலும்,அகிலன் என்றும் செஸ்,கேரம் போன்ற அமைதியான அறிவான விளையாட்டுகளையே விரும்பினான்.அவன் இளமைப் பருவதில், சிங்கத்தின் கம்பீரமும், சிறகுகளின் மென்மையும் கலந்த தேவகுமாரனாய் விலங்கினான்.
காமராஜின் நெருங்கிய நண்பரும் கிரித்தவ தேவாலய பாதரியாரும் ஆன தாமஸின் உடல்நிலைகுறையவே,தனது வீட்டினை தேவாலயம் அருகினில் மாற்றினார் காமராஜ்.அங்குதான் அந்த தேவதையை தரிசித்தான் அகிலன்.தன்னை கடலிலிருந்து பிடித்ததும் துடிதுடிக்கும் மீன், துள்ளிக்கொண்டே இருக்கும்.அங்கும் இங்கும் நழுவி, கடலில் குதித்தாலும், மறுநாள் ஒரு வலையில் அகப்படும். ஆனால், யாழினி என்ற ஒரே வலையில் அகப்பட்டான் அகிலன்.அவன் கண்கள் அவள்மீது படும்போது அவன் உயிர் ஒரு முறை அவனைப் பிரிந்து மீண்டும் சேர்ந்தது.அந்த மரணமும் ஜனனமும் பல முறை நடக்க வேண்டும் என்று அவன் துடித்தான்.கல்லூரியில் தன்னைக் காதலித்த பெண்களையெல்லாம் ஒதுக்கியவன், அவன் வீட்டு முதலாளியின் மகளான யாழினிதான் அவன் மனதின் சொந்தக்காரி என்று முடிவுசெய்தான்.ஆனால்,அதை அவளிடம் சொல்லும்முன், தன் பெற்றோரிடம் சொல்ல நினைத்தான்.
மறுநாள் அகிலனின் பிறந்தநாள்.ஒவ்வொரு வருட பிறந்தநாளுக்கும் மாலையில், குடும்பதோடு அருகில் உள்ள இடும்பன் கோயிலுக்கு போவது அவர்கள் வழக்கம்.அங்கு வைத்து, இடும்பன் சாமியிடம் தைரியம் வாங்கிக்கொண்டு,பெற்றோரிடம் யாழினியைப் பற்றி சொல்லிவிட முடிவு செய்தான்.காலையில் எழுந்தவுடன்,பிறந்தநாளைவிட காதல் சொல்லும் உற்சாகம் அவன் கண்களில் அதிகமாக துள்ளியது.அவனுக்கு முன்னதாகவே தந்தையும் தாயும் கிளம்பியிருந்தனர்.புத்தாடையோடு இருந்த இவனையும் கிளம்பச்சொன்னார்கள். "எங்கே?", என்றவனிடம், "நமது கிச்சா வாத்தியார் மகள் யாழினிக்கு நிச்சயதார்த்தம்",என்று தாயின் குரல் இடிகொடுக்கவே, அவன் மயங்கிவிழுந்தான். ஆஸ்பத்திரியில் சிறிய ஊசிபோட்டு அனுப்பிவிட்டார்கள்.அவர்களால்,அவன் மனதில் போட்ட ஊசியை எடுக்க முடியாது.அதன்பிறகு, புகையும், அவள் புகைப்படமும் அவன் கைகளில் நிறந்திரமாகிவிட்டன.நல்ல குடிமகனான காமராஜ், தன் குடிக்கும் மகனைக் கண்டு நொந்துபோனார்.அவருக்கு ஆறுதல் தந்த ஜீவன் தாமஸ் மட்டுமே.ஆனால்,தாமஸும் ஒரு நாள் இறைவனடி சேரவே,மகனை நினைத்து அழுவதைத் தவிர வேறுவழியின்றி தவித்தார்.மனைவியை சமாதானப்படுத்துபவர்,உள்ளே அழுதுகொண்டிருந்தார்.
மாதா,பிதா,குரு,தெய்வம் அனைத்தையும் மறந்த அகிலனால், யாழினியை மட்டும் மறக்க முடியவில்லைஅவள் நினைவில் நனைந்து கொண்டுருந்தவனை ஒரு நிமிடம் தன் மென்மையால் இழுத்தது ஒரு பட்டாம்பூச்சி.அதை தன் ஆள்காட்டிவிரலில் ஏந்தி, மெதுவாக தடவிக்கொடுத்தான். மீண்டும் அதைப் பறக்கவிட்டு, அவள் நினைவையும் சிகரெட்டையும் பற்றவைத்தான்...
மெல்லிய பயணம்-2
கதிரவன் தன் கதிர் கரங்களால் வளைத்துக்கொள்ளும் வெயில் காலம் அது.என் மெல்லிய சிறகுகள் வியர்வையோடு பறந்தன.என் தோழிகளோடு நான் சென்ற போது,மாளிகை போன்ற ஒரு கட்டிடம் கண்டோம்.வெளியே, என் பிரியமான பூக்கள்,வரவேற்பு அழகிகளோடு அணிவகுத்து நின்றன.ம்!எங்களுக்குதான் வரவேற்பும் இல்லை, வெளிநடப்பும் இல்லை.சட்டென உள்ளே சென்றோம்.அடடே! அனைவரும் எங்களை ரசித்துப் பார்த்ததில் வெட்கம் கொண்டோம்.
உள்ளே, ஏதோ ஒரு கலை நிகழ்ச்சியின் பாராட்டு விழா.பரிசுகள் வழங்கிக்கொண்டிருந்தார்கள். ஏ.சி யின் குளிர்,வெயில் பட்ட என் சிறகுகளுக்கு இதமாக இருந்தது. துள்ளிக்குதித்து அங்குமிங்குமாய் பறந்தேன்.அடுத்த பரிசு அறிவித்தபோது ஆனந்தத்தில் அதிர்ந்து நின்றேன்.ஆர்வம் பொங்கியதில், முதல் வரிசையில் பறந்து மகிழ்ச்சியோடு ஆனந்த் பரிசு வாங்குவதைக் கண்டேன்."பேச்சுப்போட்டிக்கான மாநில அளவு முதல் பரிசு சிறுவன் ஆனந்திற்கு முதல்வர் கைகளால் வழங்கப்படுகிறது",என்றவுடன், எனது ஆர்வம் அருவியென பொங்கி, ஆனந்த் நகர்ந்து வந்த அந்த மூன்று சக்கரநாற்காலியில் நானும் அமர்ந்து பெருமை கொண்டேன்.ஆகா!சிரித்தால் இந்த கால் இல்லாத குழந்தை எத்தனை அழகாக இருக்கிறான்.இமயத்தின் மேலிருந்து உலகினை காணும் அளவு மனதில் இன்பம் பொங்குகிறது. இதே ஆனந்த்.இவனை முதல்முறைக் கண்டபோது எவ்வளவு வருந்தியிருப்பேன்..
எனக்கு பிடித்த வெள்ளை ரோஜாக்கள் அதிகம் இருந்த இடம் அது.அங்கு இருந்த உள்ளங்களும் வெள்ளையே!அகிலனின் வீட்டிற்கு அருகேதான் அந்த "குழந்தை ஏசு குழந்தைகள் இல்லம்" இருக்கிறது.பாதரியார் தாமஸ்தான் இதன் உரிமையாளர்.அங்கு, சின்னஞ்சிறு குழந்தைகள் ஓடி ஆடி பாடி மகழ்ந்தாலும், என் கண்களில் தென்பட்ட அந்த பிஞ்சுமுகம் வாடியே இருந்தது.பாதரியார் தாமஸினால், அந்த குழந்தைகளுக்கு தாங்கள் அனாதை இல்லை என்ற எண்ணம் கொடுக்க முடிந்ததே தவிர, ஆனந்தின் உடல் ஊனம் அவன் மனதைத் தாக்கியதை நிறுத்த முடியவில்லை.அதனால், மாலை வேலைகளில் தாமஸும் காமராஜீம் கடற்கரையோரம் நடக்கச் செல்கையில், ஆனந்தையும் அழைத்துச்செல்வார்கள்.அன்று நானும்தான் சென்றேன்.
"கவிதைப் போட்டிக்கான மாநில அளவு முதற்பரிசு சிறுவன் ஆனந்திற்கு முதல்வர் கைகளால் வழங்கப்படுகிறது", என்ற மைக் முழக்கம் என் சிந்தனையைக் களைத்தது.மீண்டும் நான் அதே மூன்று சக்கரநாற்காலியில் மேடையேறினேன், அதே ஆனந்தத்தோடு.இரண்டாம் முறை நான் ஆனந்தைச் சந்தித்தபோது, அது ஒரு கொடிய நிகழ்ச்சி.குழந்தைகள் தினவிழாவில்,அனைத்து குழந்தைகளுக்கும் மிட்டாயும் வெள்ளை ரோஜாவும் வழங்கப்பட்டது. ஆனால், என் அபிமான ஆனந்த், மிட்டாயை கீழே போட்டுவிட்டு, அந்த ரோஜாவை,என் அருமை தோழியை,என் கண்களுக்கு எதிரே கிழித்து எறிந்தான்.மற்றவர்கள் கண்களில் கோபம், என் கண்களில் கண்ணீர், ஆனால் பாதரியார் தாமஸின் கண்களில் இரக்கம்.
"மீண்டும் நமது ஆனந்த் 'சிறந்த பாடகர்' என்ற பட்டத்தையும் பரிசையும் நமது முதல்வரின் திருக்கரங்களால் பெறுமாறு மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம்".
ஆகா!!அன்று எனக்கு ஆவேசக்கண்ணீர் கொடுத்த அதே ஆனந்த், இன்று ஆனந்தக் கண்ணீர் தருகிறான்."இன்றைய நாயகன் பட்டமும் இந்த திறமை நிறைந்த மாணவனுக்கே தரப்படுகிறது", என்றவுடன் தன் கையிலிருந்த கோப்பைகளையும் கேடயங்களையும் எங்கு வைப்பதென்று தெரியாத திகைப்பும் மகிழ்ச்சியும் கலந்த ஆனந்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
மகழ்ச்சியான இடம் கிடைத்தால் உலகமே அதுதான்;இனி அனைத்தும் இனிமையே என்ற எண்ணம் மனிதர்களுக்குதான் உண்டு.ஆனால், என்னைப் போன்ற பட்டாம்பூச்சிகளுக்கு இன்பம் என்பது உலகெங்கும் உள்ளது.காற்றின் ஸ்பரிசத்தைக் காதலித்து, வெளிச்சத்தின் திசையில் சென்று, இருளின் போர்வையில் தூங்கும் எனக்கு மரணம் என்பது ஒரு நொடியில் வரலாம்.அந்த ஒரு நொடி வரும் முன்பு, உலகெங்கும் பறந்து மகிழ்வது என் குணம்.இந்த மனிதர்களுக்குதான் இதை எப்படி புரியவைப்பது என்றே தெரியவில்லை.
என் சிறகுகளால் ஆனந்தின் தலையை சிறிதாகக் கோதி பாராட்டு தெரிவித்து, அதே உற்சாகத்தோடு, கதிரவனின் அவதாரம் எந்நிலையில் உள்ளதென்று பார்ப்பதற்காக வெளியே பறந்தேன்.எனது மெல்லிய பயணம் ஆனந்தமாக தொடர்கிறது...
கதை-2
அது ஒரு ரோஜாவனமா இல்லை குழந்தைகள் காப்பகமா என்றே தெரியாது.ரோஜாக்களின் எண்ணிக்கை ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் அங்கிருந்த மொட்டுகள்.தாய் தகப்பனின்றி சமுதாயதினால் அனாதை என்ற பட்டம் பெற்றது கூட அறியாவண்ணம்,
பாதரியார் தாமஸின் ஆதரவிலும் அரவணைப்பிலும், இருக்கும் நாட்களை இனிதாய் வாழத்தெரிந்த மொட்டுகள் நிறைந்த ரோஜாவனம் அது. அந்த இடத்தில் என்றும் வாடியே காணப்படும் மொட்டின் பெயர் ஆனந்த். தான் அனாதை என்பதைவிட தன் கால்கள் வளர்ச்சியற்றவை என்ற எண்ணம் அவன் மனதை ஊனப்படுத்தியது.மற்ற குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும்போது, ஆனந்தின் கண்கள் சுனாமியென பொங்கும்.
தனது உடல்நிலை மோசமாக இருப்பதைக் கண்ட பாதரியார் தாமஸ்,தனக்குப்பிறகு அந்த அனாதை இல்லத்தை தன் நண்பரான காமராஜின் பொறுப்பில் விட முடிவுசெய்தார். இருப்பினும் ஆனந்தின் நிலை எங்ஙனம் முன்னேறும்?அவன் மற்ற குழந்தைகள் போல ரோட்டிலோ, குப்பைத்தொட்டியிலோ கிடந்தவனல்ல.தாமஸின் இளமைக் காலங்களில், அவருக்கு வேலையோடு அன்பும் தந்து கவனித்துக் கொண்ட அவர் முதலாளியின் பேரன்.ஒரு தீ விபத்தில் முதலாளியின் வீடே பற்றியெறிந்த போது, முழுகர்ப்பினியாக இருந்த முதலாளியின் மகளை மட்டும்தான் தீயணைப்புத்துறையினரால் காப்பாற்ற முடிந்தது.இருப்பினும் ஆனந்திற்கு உலகைக்காட்டிவிட்டு, அவன் தாய் சொர்க்கம் சென்றுவிட்டாள்.நன்றி,அழுகை,பாசம் இந்த மூன்று உணர்ச்சிகளும் சேர்ந்து தாமஸினை இந்த குழந்தையை எடுத்து வளர்க்கச் செய்தது.
இந்த உண்மை வெளி உலகிற்குத் தெரியாது.பிறக்கும் போது பணக்காரராகப் பிறந்த முதலாளி, இறக்கும்போது கடனாளியாக இறந்தார். அந்த பாரத்தை இந்த காலில்லா குழந்தையால் சுமக்க முடியுமா?இப்படிப்பட்ட நிலையில், இந்த குழந்தை உடைந்து விடாதா?சிரித்து விளையாடுமா? ஆனால், இப்போதும் ஒரு பயனும் இல்லை.இத்தனை உண்மையும் தெரியாத போதும் ஆனந்த் யாருடனும் சிரித்துப் பழகவில்லை. அதனால், மரணப்படுக்கையிலிருந்த பாதரியார், ஆனந்திடம் அனைத்து உண்மைகளையும் கொட்டிவிட்டார்.
முதல் முறையாக இறுகியிருந்த அந்த இளம் முகம் கண்ணீர் சிந்தி உணர்ச்சி வெளிப்படுத்தியது.மேலும் பாதரியார்,"உனக்கு இதை ஏன் சொன்னேன் என்றால்,நாளை நீ பல துறையில் சாதித்து, பலருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து, பெரியவனான பிறகு, இந்த உலகத்திற்கு நீ அனாதை இல்லை என்று சொல்லி, உன் தாத்தாவின் கடனை அடைத்து, மீண்டும் உன் பரம்பரை பெருமையை நிலைநாட்டு.நான் அனைத்து உண்மைகளையும் என் கைப்பட எழுதி, காமராஜி......." , வாழ்வு முடிந்தது தாமஸிற்கு.வாழ்க்கையே புதிதாக ஆரம்பித்தது ஆனந்திற்கு.
அதன் பிறகு அவனுள் நிகழ்ந்த மாற்றங்களின் அடையாளமாக அந்த வருட "திறமையாளர்கள் பாராட்டு விழா"வில் பல விருதுகள் குவித்து, "இன்றைய நாயகன்" பட்டமும் வாங்கினான்.அதன் புகைப்படங்களைப் பார்க்கும்போது அவன் பூரித்துப்போனான்.அவன் பரிசு வாங்கியதில் எத்தனை உள்ளங்கள் மகிழ்ச்சி கொண்டது.காமராஜ்,அவன் தோழர்கள்,அந்த விழா குழுவினர்,முதல்வர் மற்றும் ஒரு உள்ளம்.அவன் பரிசு வாங்கும்போது கூடவே வந்து பெருமைகொண்ட ஒரு அழகிய பட்டாம்பூச்சியையும் புகைப்படத்தில் கண்டு புன்னகைபுரிந்தான், ஆனந்தத்தோடு.
மெல்லிய பயணம்-3
அது ஒரு அழகிய கிராமம்.இந்தியத்தாய்க்கு எழில் தரும் பச்சைப்புடவையைத் தருவது இதுபோன்ற எழில்மிகு கிராமங்கள்தான். அத்தகைய வயல்களில் காக்கைகளும் குருவிகளும் நெல்மணிகளை உண்ண ஆசையாய் வரும்.அவற்றை பயமுறுத்தும் வண்ணம் மனிதர்கள் போன்ற பொம்மைகள் நிற்கும். பெரிய பறவைகளெல்லாம் பயத்தில் பறந்துவிட, சிறிய பட்டாம்பூச்சிகளான நாங்கள் அந்த பொம்மைகளின் தலையில் அமர்ந்துகொண்டு சிரிப்போம். பெரிய பெரிய நகரங்களிலெல்லாம் கற்பு,கல்யாணம்,உயிர் போன்றவைகூட சிறு விஷயமாகிப் போன இன்றைய காலத்தில், சின்னஞ்சிறு விஷயமும் இனிதாகக் கொண்டாடப்படுவது கிராமங்களில்தான்.சிறுவர்களின் கோலி,பம்பரம், சிறுமிகள் குமரியாகுதல், பெண்பார்த்தல், கல்யாணம், காதுகுத்து, கடாவெட்டு, பேரன்பேத்தி என அனைத்து சுவைகளையும் சுவைத்த பழமான அந்த பெரியவர்தான் என்னை சிறுவர்கள் கையிலிருந்து மீட்டார்.
நாட்களும் நிமிடங்களும் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றன.சிரிப்பவன் அழுகிறான்,உழைப்பவன் ஊனமாகிறான்.சீரற்ற மாணவன் சிந்திக்கிறான்.மரங்கள் கரியாகின்றன,செடிகள் மரங்களாகின்றன.இத்தகைய இயற்கை மாற்றங்களாலும் அசைக்கமுடியாத கருங்கள் என நிற்கிறார் முத்துராசுத்தாத்தா, என்னைக் கைகளில் ஏந்தி.நான் பிறந்ததே இந்த கிராமத்தில்தான்.முதல்முறை நான் ரீங்காரம் பாடியது இதே முத்துராசுத்தாத்தாவின் காதுகளில்தான்.அன்றும்சரி, இன்றும்சரி, நல்லதையே நினைத்து வாழும் இவர் ஒரு சுதந்திரப் போராட்டத்தியாகி.சுதந்திரப் போராட்டத்தைவிட இவர் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் செய்தவைதான் அதிகம்.
இவர் நடக்கும்போது என்னைப்போன்ற சிறிய உயிர்களை வதைக்காமல் நடப்பார்.பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கமாட்டார்.வயது எழுபத்து நான்கு ஆகி,இன்றும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்துவருகிறார்.அந்த கிராமத்தில் நடக்கும் ஊழல்களை எதிர்த்து போராடுவார்.தன் மனைவியின் இறந்தநாளன்று ஏழைக்குழந்தைகளுக்கு விருந்தளிப்பார்,மற்ற நாட்களில் அந்த குழந்தைகளுக்கு பசி தெரியாத அளவு கதை சொல்லுவார்.அந்த ஊரில் பசுமாடுகளுக்கு பிரசவம் பார்ப்பதில் கைத்தேர்ந்தவர்.இதுபோல அடுக்கிக்கொண்டே போகலாம்.
இது என்ன சாதனை என்று யோசிக்கிறீர்களா? இதில் ஒரு செயலையாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா?இன்றைய சமுதாயத்தில் கிடைத்த சுத்ந்திரத்தை முழுதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கியவர் யார்தான்?அது எவ்வளவு பெரிய சாதனை!ஒரே ஒருவர் இப்படி வாழ்வதனால் என்ன பயன் என்ற கேள்வி எழுந்தால், முதலில் நீங்கள் அப்படி வாழ்ந்துபாருங்கள், பயனை உணர்வீர்கள்.
ம்!! எனக்குப் பிடித்தவர்களைப்பற்றி பேசச் சொன்னால் இப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பேன்.இதோ,தாத்தா அவர் மனைவியைக் காணச் செல்கிறார்.நானும் அவர் தோள்மீது ஏறிச் செல்கிறேன்.நீங்களும் வாருங்களேன்!!
கதை-3
இந்தியா,ஆங்கிலேயர் கையில் அகப்பட்டு அடிமையாக அழுதுகொண்டிருந்தது.அந்த நேரத்தில் வெயிலின் சூட்டைவிட,எரிமலையின் கோபத்தைவிட,கடலலையின் வேகத்தைவிட,புயலின் வெறியைவிட அதிகமாக பொங்கிய இள இரத்தங்களில் ஒருவர் பழுவூர் முத்துராசு.செல்வந்தர் என்றாலும் அவருக்கு என்று கொள்கைகள் இருந்தன.ஒருவன் பெற்றோர் பணத்தை செலவு செய்யும்போது பணத்தின் அருமை தெரியாது.அந்த பணத்தில் தானம் செய்தால் அது அவன் உணர்ச்சி வெளிப்பாடு தவிர, செயல் வெளிப்பாடு கிடையாது.அந்த பணத்தில் ஊர்சுற்றினால் அவன் சிரிக்கலாம். மகிழ்ச்சியாய் இருக்க முடியாது.அவன் தனது சொந்த உழைப்பில் பெற்ற ஒவ்வொரு சில்லறையையும் அதன் விலை அறிந்து செலவழிப்பான்.கஞ்சனாகிவிட மாட்டான்;உழைப்பாளி ஆகிவிடுவான்.அவன் செய்யும் தானம் அவனுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இன்பம் தரும்.அப்படி, தான் உழைத்த பணத்தை ஒழுங்காக பயன்படுத்தாதவன் மனிதனாய் பிறந்ததே தவறு.பறக்கத் தெரிந்தவுடன் தாயை மறந்த குருவி போல மனிதன் இருத்தல் தவறு. இத்தகைய எண்ணம் கொண்டிருந்ததால் அவர் தன் தந்தையின் ஆசியை மட்டும் சொத்தாக பெற்று சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றார்.
அப்படி கொள்கையோடும் உழைப்போடும் பெற்ற சுதந்திரத்தை உண்மையாக பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அவர் கடமை என கருதினார். அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளம், அந்த கிராமத்தின் கன்று முதல் காளைவரை அனைவரும் மதிக்கும் மனிதர், இவருக்கு கோபம் வராதா? அதை எப்படி வெளிப்படுத்துவார்?அந்த கோபத்தையும் இறைவனடி குங்குமமாக பக்தியோடு ஏற்றுக்கொள்ளும் அவர் மனைவியிடம்தான் கோபம் காட்டுவார்.
ஆனால்,அவர் அடங்கிவிடும் மடமும் அந்த மங்கையிடம்தான்.தீப்பொறியென கோபம் காட்டினாலும் அந்த குத்துவிளக்கின் புன்னகை அவரை தீபமாக்கிவிடும்.அவரது நல்ல உள்ளத்திற்கு ஆண்டவன் கொடுத்த வரம்தான் அவரது மனைவி பேச்சி என்று கருதினார்.அவரது அறுபதாம் கலியாணத்தின் போது பதினைந்து வயதில் அவர்கண்ட அதே மென்மை,அதே அடக்கம்,நாணம், அதே அழகோடு அருகில் அமர்ந்திருந்த பேச்சியை அதே கம்பீரத்தோடும் அதே காதலோடும் நோக்கினார் முத்துராசு தாத்தா.அதன்பிறகு நான்கு வருடம் கழித்து உலகில் கணவனுக்கு பணிவடை செய்தது போதும் என்று நினைத்தார்போலும்.சொர்க்கம் சென்று அங்கு அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்.பத்து வருடமாகி விட்டது.இன்னும் பேச்சியிடமிருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை.
தினமும் அவர் அந்த பெண் தெய்வதின் சமாதிக்கு சென்று பூக்கள் வைத்து அரிசிமாவுக் கோலம் போடுவார்.பூக்கள் பேச்சிக்கு என்றாலும் பிண வாடையில் இருக்கும் வெட்டியானுக்கு சற்று வாசனைதான்.அரிசி கோலம் எறும்புகளுக்கு.மனதார்ந்த எண்ணங்கள் அவர் மனைவிக்கு.இதே பரிசுகளோடு அன்றும் மனைவியை சந்திக்க கிளம்பினார்.வழித்துணைக்கு ஒரு பட்டாம்பூச்சியோடு...
மெல்லிய பயணம்-4
அது ஒரு அழகிய இடம்,அமைதியான இடம்.மனிதர்களுக்குதான் இது சோகக்கடல்.மற்ற அனைத்து உயிரினங்களும் ஓடி ஆடும் சோலைவனம் எங்களுக்கு.இது அற்புதமா, மாயக்காட்சியா என்று வியந்திருக்கிறோம்.ஏழை பணக்காரனில்லை;ஜாதிக்கலவரமில்லை; மாமியாரும் இல்லை; மருமகளுமில்லை; வம்பு இல்லை வெறுப்புமில்லை.உயிரிருந்தவரை அடங்காமல் ஆடிக்கும்மாளம் அடித்த அனைத்து உயிர்களும் அடங்கி அமைதியாக உறங்கும் சுடுகாடு இது. முத்துராசுத்தாத்தாவிற்கு தனிமை கொடுத்துவிட்டு நான் மற்ற பறவைகளோடு சிறகடித்து ஒவ்வொரு சமாதியையும் கண்டேன்.
இந்த மனிதர்கள்தான் எவ்வளவு அற்ப புத்தி கொண்டவர்கள்?ஆர்ப்பாட்டக்காரர்கள். இறந்த உயிர்களுக்குள் பாகுபாடு இல்லை என்றாலும் இவர்கள் ஒரு சமாதியைவிட இன்னொன்று பெரியாதாகவும் அழகாகவும் தெரிய எவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்?உயிர் இழந்தவர்களுக்கு நாம் காட்டும் பாசம் மனதால் இருக்க வேண்டும் தானத்தினால் இருக்க வேண்டுமே தவிர,இப்படி அலங்காரம் காட்டக்கூடாது.
ம்!! நான் சொல்வது இவர்கள் காதுகளில் விழவா போகிறது? இல்லை விழுந்தாலும் இவர்கள் திருந்தவா போகிறார்கள்?இதோ இந்த சமாதி எவ்வளவு பெரியதாக இருக்கிறது? எதோ புகைப்படம்... இது.. நான் பார்த்த முகம்போல்...இருக்காது.ஏஞ்சல் ஒரு தேவதை.அவளை இவ்வளவு சீக்கிரம் மரணம் தாக்கி இருக்காது.ஆனால் அங்கு எழுதியிருந்த பெயரோ ரோஸி.ஒரு கனம் பயந்தாலும், அது ஏஞ்சல் அல்ல;யாரோ ரோஸி என்ற நிம்மதியோடு அடுத்த சமாதிக்கு பறந்தேன்.
வெட்டியான் முகம் சுளித்தான்.முத்துராசுத்தாத்தா புருவம் தூக்கி, கன்களில் இரக்கம் காட்டி,"ஏன்?" என்பதை பேசாமல் கேட்டார்."பெறகு என்ன சாமி?பொறப்பல இருந்து செத்த வாசனதான் நான் நெதம் இலுக்கறேன்.நீ நெதம் பூவெச்சு போனப்பறமா எனக்கு வயத்த பொறட்டுது சாமி", என்று தலை சொறிந்தான். முத்துராசுத்தாத்தாவிற்கு சிரிப்பதா அவன் தலையில் கொட்டுவதா என்றே தெரியவில்லை."ஏ மடையா! நீ சற்று நேரம் இந்த பிணவாடை விட்டு பூவாசம் நுகரவே நான் நிறைய பூக்கள் கொண்டுவருகிறேன்",என சொல்ல எண்ணியும் அது பயனில்லை என்று அவருக்குத் தெரிந்து இருந்தது.
சிறிது புரியாத கோபத்தோடு திரும்பி பூக்கள் நிறைந்த பேச்சிபாட்டியின் சமாதியைப் பார்த்தார்.அந்த சிறு விளக்கின் வெளிச்சத்தில் பேச்சிபாட்டி சிரித்துக் கொண்டே முத்துராசுத்தாத்தாவின் கோபத்தை அணைத்துவிட்டார்.கண்ணீருடன் முத்துராசுத்தாத்தா செல்ல, பறவைகளுக்கும் முள் செடிகளுக்கு "டாடா" சொல்லிவிட்ட பிறகு, என் தோழிகளோடு எனது மெல்லிய பயணம் தொடர்கிறது...
கதை-4
பணக்காரர்கள் என்ற அடையாளத்தைவிட சற்று அதிகமாகவே பந்தா காட்டிய வீடு அது.அதன் கதவுகளை ரசித்துப் பார்க்கவே அரை நாள் ஆகிவிடும்.நமது வீடுகளைச் சுற்றித் தோட்டம் இருக்கும்.ஆனால், அங்கு அழகிய தோட்டத்திற்கு நடுவில் மாளிகை போன்ற வீடு. அது பிரபல தொழிலதிபரான மனோகரின் வீடு.அவர் மனைவியின் பெயர் சிப்பி.அந்த சிப்பி,ஒரே சமயத்தில் இரண்டு பெண்முத்துகளைக் கொடுத்துவிட்டு இந்த உலகைத் துறந்தது. இரண்டு இளவரசிகளுக்கும் ரோஸி,ஏஞ்சல் என்று பெயரிட்டார் மனோகர்.தாயில்லாப்பிள்ளை என்பதால் செல்லம்தான்;அதுவும் அளவுக்கு அதிகமாகவே.
அரச மாளிகைகளின் அந்தப்புரத்தைவிட பெரிய அறை ரோஸி,ஏஞ்சலின் அறை.அவர்கள் இருவரும் ஆடையிலிருந்து துண்டு,செருப்பு வரை ஒரே போலத்தான் உடுத்துவார்கள்.அதில் என்ன ஆடம்பரம் என்றால்,சிவப்பு என்று முடிவு செய்தால்,மறுநாள் அவர்கள் போர்வை, கைக்குட்டை,ஆடை,நகைகள்,செருப்பு,கார் முதல் பர்ஸ்வரை அனைத்தும் ஒரேபோல சிவப்பு நிறத்தில் இருக்கும்.மறுநாள் வேறொரு நிறம்.இவ்வளவு ஆர்பாட்டம் தரமுடிந்த தந்தையால், தாய்ப்பாசம் ஒன்றைமட்டும் தரமுடியவில்லை.
இளவரசிகளின் ஆடையும் ரேகையும் ஒரேபோல இருந்தாலும், அவர்களின் குணம் அப்படியே எதிரெதிராக இருக்கும். ரோஸி, பணத்தின் வாசனையை சுவாசிப்பவள்.வேலையாட்களை கிண்டல்செய்வதும் அவர்களை கேவலப்படுத்துவதும் அவளின் பொழுதுபோக்கு. பட்டாம்பூச்சிகளையும் தட்டான்களையும் ஜாடியில் அடைத்துவைப்பதில் ஆனந்தம் தேடினாள்.அவளோடு தோழிகள் என்ற பெயரில் சுற்றும் பெண்களும் இவள் ஆடம்பரத்திற்கு மயங்கியவர்களே.இவளிடம் யாராவது காதல் சொல்லிவிட்டால், கல்லூரியின் அனைத்து சுவர்களிலும் அந்த கடிதம் ஒட்டப்படும்.அவன் சிதைய சிதைய இவள் சிரிப்பாள்.பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் இருந்தாலும், ஏஞ்சலை உயிராக நேசிப்பவள்.
ஏஞ்சலோ, ரோஸிக்கு தங்கையாக இல்லாமல்,தாயாக இருப்பவள்.காலை எழுந்தவுடன் தந்தைக்கு தன் கைகளால் காபிகொடுப்பாள். வேலையாட்களோடு சரிசமமாகப் பழகுவது,தேவாலயம் செல்வது,பெரியவர்களை மதிப்பது என்று பெயருக்கு ஏற்றார்போல தேவதையாக இருப்பவள்.வகுப்பில் கலகலப்பாகப் பேசுவதும், இனிமையாகப் பழகுவதும் இவளுக்கு பல தோழிகள் இருப்பதன் காரணம்.
ரோஸி வகுப்பில் படிக்கும் சுரேஷ் ஏஞ்சலைக் காதலித்தான்.ஆனால்,ரோஸியையும் அவர்கள் பணத்தையும் வெறுத்தான்.முகம் ஒன்றாக இருந்தாலும், இருவரையும் குணத்தால் வித்தியாசம் கண்டுவிடுவான்.அன்று காலை ரோஸி கல்லூரி சென்றதும் திடுக்கிட்டாள்.காதல் கடிதங்கள் சுவரெங்கும்.
"அன்புள்ள ரோஸி,
உன் அழகில் நான் மயங்கி திளைக்கிறேன்.உன் கூந்தலில் என்னை ஊஞ்சலாட்டுகிறாய்.உன் பலிங்கு மேனி என்னைப் பைத்தியம் ஆக்குகிறது.உன் விழிபட்டால் என் ஆயுள் கூடுகிறது."
கடிததைப் படிக்க படிக்க திமிரான சிரிப்பும் வியப்பும் ரோஸியின் கண்களில்.
"ஆனால்,கருங்குரங்கைவிட மட்டமான உன் குணம்தானடி எனக்கு பிரச்சனை.நீ பெண்ணா ராட்சசியா என்று பல முறை யோசித்ததில் என் நேரம்தான் வீணாகியது.அதனால்,பெயரிலும் குணத்திலும் ஏஞ்சலாக இருக்கும் உன் தங்கையை மனமாரக் காதலிக்கிறேன். வாழ்க்கையில் ஏதாவது உருப்படியாக செய்ய நினைத்தால்,எங்களை சேர்த்து வை
காதலுடன்(உன் மீது அல்ல)
சுரேஷ்."
என்று படித்தவுடன் கேலிச்சப்தங்கள் கேட்டு அவள் திரும்பினாள்.சுற்றி நின்ற அனைவரும் கைகொட்டி நகைத்தனர்.ராட்சசி மோகினியாகிவிட்டாள்.அந்த அவமானமும் வெறியும் முற்றி அவள் காரில் ஏறி துப்பாக்கியிலுருந்து புறப்படும் தோட்டாபோல பறந்தாள். ஆனால், கார் மரத்தில் மோதிவிட்டது.மரம் மோதி பிழைத்தவருண்டு;ஆணவம் கொண்டு பிழைத்தவருண்டா?அந்த இடத்திலேயே இறந்து போனாள்.
இதை யாருமே எதிர்பார்க்கவே இல்லை.ஏஞ்சல் துடிதுடித்துப்போனாள்.பத்து நாட்கள் ஆகிவிட்டன.ரோஸிக்கு இறுதி பூசைசெய்ய அனைவரும் தேவாலயம் சென்றிருந்தனர்.தவறு செய்பவர்களை அடக்கிவைக்கலாம் அழித்துவிடக்கூடாது என்று உணர்ந்து இருந்த சுரேஷும் வந்திருந்தான்.கண்மூடி ரோஸியை நினைத்து அழுது கொண்டிருந்தாள் ஏஞ்சல்.அவள் கண்ணீரை தேநீரென நினைத்து ஆசையோடு தீண்டியது ஒரு பட்டாம்பூச்சி.அதற்கு இத்தனை கதையும் தெறியுமா என்ன?அவள் அதை எடுத்துப்போய் அங்கிருந்த பூக்களின்மீது விட்டு தடவிக்கொடுத்தாள், ரோஸியின் நினைவுகளோடு.
மெல்லிய பயணம்-5
இலைகளைவிட மெல்லிய மெத்தை உண்டா?அதில் தூங்குவதுதான் எத்தனை சுகம்.அடர்ந்து படர்ந்த வாசனைமிக்க மல்லிகைச் செடியின் நடுவே உறங்கினால், குளிரோ வெயிலோ தாக்காது. தூக்கம் கலைந்து எழும்போது பெண்கள்தான் எத்தனை அழகு! பட்டாம்பூச்சிகளும்தான்! நாங்கள் வேறு உலகத்திலிருந்து புதிதாய் பூமிக்கு வந்ததுபோல கண்விழிப்போம்.பிறகு நாம் பிறந்த அதே பூமியில் வாயுதேவனை சுவாசித்து வாழ்கிறோம் என்று உணர்வோம். பாதி கண்கள் மூடியும் மீதி கண்கள் திறந்துமாய் என் தோழிகளைப் பார்த்தேன்.சிறிது நேரத்திற்குப் பிறகு எங்கள் பயணம் தொடர்கிறது.இன்று ஏதொ ஒரு உற்சாகத்தோடு ஓயாமல் பறக்கிறோம்.
கடலின் பக்கமாகப் பறக்கிறோம்.ஒரு பெரிய படகில் ஏதோ சப்தம் கேட்கிறது.அங்கே விரைந்தோம்.அது ஒரு பெண்ணின் குரல்.சாதாரண சப்தமல்ல. கதறல்,துடிப்பு,அழுகை,வலி அனைத்தும் கலந்த கீதமாக அவள் கதறுகிறாள்.அந்த துடிப்பிலும் ஒரு ஸ்ருதி, இன்பத்தின் ராகம் கொண்டிருக்கிறது.நான் பார்க்கிறேன்.என் குண்டூசிக் கண்களால் அந்த தெய்வீகக்காட்சியைக் காண்கிறேன். அந்த பெண் பிரசவ வலியால் துடிக்கிறாள். "அழுவாத குப்பி! நான் இருக்கேன்ல? நம்ம புள்ளய நல்லபடியா வெளிய கொண்டுவரலாம்",என்று சொல்லிக்கொண்டே தன் கைகள் முழுவதும் நல்லெண்ணை பூசிக்கொண்டு, இறைவன் பாதத்திலிக்கும் பூக்களை எடுப்பதுபோல, அவன் பவ்யமாக அந்த பிஞ்சு உயிரைத் தன் கையிலெடுத்து பக்தியும் பூரிப்பும் கலந்து பார்த்தான்.தன் முக ஜாடையை அந்த மொட்டின் முகத்தில் கண்டுபிடித்தான். கதறி கதறி தொண்டைவறண்டு மயங்கிய தன் மனைவியைப் பார்த்து, அவள் நெற்றியில் ஒரு முத்தமும் பட்டுப்பூச்சியைப்போன்ற அந்த குழந்தையின் நெற்றியில் மறுமுத்தமும் வைத்தான். ஆனால், அவள் மயங்கிய காரணம், பெண்மை மட்டுமே உணரக்கூடிய மயக்கம்.
படகின் விளிம்பில் நான் திகைப்போடு நின்று பார்த்துக்கொண்டிருக்க, அந்த குழந்தையை அவன் எனதருகில் எடுத்து வந்தான்."ஆ" என்றவாறு நான் சற்று தள்ளி சென்று பார்த்தேன். "நீ ஒரு மெட்டாமெராசு வூட்டுல பொறந்துருந்தா உன் முதல் குளியல் முத்தும் பவுனும் வச்சு நடக்கும். இந்த கருப்பன் மவனா பொறந்தா இப்படி உப்புத் தண்ணியிலதான் உனக்கு அபிஷேகம்", என்றவாறு கதறிய குழந்தையின் மேலிருந்த திரவங்களை கடல்நீரால் துடைத்தான்."ஆனா மவனே! குப்பத்துல நமக்கு ஒரு நாதியும் இல்லாட்டியும் இந்த கடலாத்தா தான் நம்மள காப்பாத்தறா", என்று ஆறுதல் சொல்லிக்கொண்டான்.
கடல்காற்று என்னைத்தீண்டிய போது,நான் மெய்மறந்து நிற்பதை உணர்ந்தேன்.அந்த குழந்தையை முத்தமிட நெருங்கினேன்."பட்!போ", என்று கருப்பன் என்னைத்துறத்த, பயந்தவாறு பறக்க ஆரம்பித்தேன், தோழிகளோடு பேசிக்கொண்டே . தாய்மைதான் எத்தனை மகத்தானது! பெரிய பெரிய ராஜாக்களும் சக்கரவர்த்திகளும் எத்தனை போரிகளில் ஜெயித்தாலும், அவர்களைக் கண்டு நாடே நடுங்கினாலும், தங்கள் காதலியின் செல்லமான கோபத்தின் முன் மண்டியிட்டு நிற்பார்கள்.அதுபோலத்தான், உலகின் சிறந்த உணர்ச்சியான நட்பு,காதல்,தானம் போன்றவை தாய்மைக்குமுன் மண்டியிட்டு இருக்கிறது. அத்தகைய தாய்மையின் மகிமை பேசிக்கொண்டே என் மெல்லிய பயணம் புனிதமாகத் தொடர்கிறது.
கதை-5
அதுவும் நாட்டின் முக்கியமான பகுதி என்றாலும்,நம்மை முகம் சுளிக்கவும்,மூக்கை மூடவும் செய்யும் மீன் வாசமும் கருவாடு நாற்றமும் கலந்து இருக்கும்.மனித எண்ணிக்கைகளைவிட மீன்களின் எண்ணிக்கைதான் அதிகம். நாமெல்லாம் வீரத்தைக் காட்டுபவரை சிங்கம்,புலி,யானை பலம்,நரி புத்தி,குயில்பாட்டு,எலிச்சத்தம் என்று சொல்லுவோம்.ஆனால், குப்பத்து மக்கள் சொல்லிக்கொள்வது அனைத்தும் சுராவீரன்,திமிங்கல பலம்,வஞ்சிரா அறிவு,வாழமீன் அழகு,நெத்திலி உடல் என்றுதான். நமக்குள் ஜாதி உண்டு,மதமுண்டு. மனிதனின் குணத்தைவிட அவன் பணத்திற்கும் பலத்திற்கும்தான் மரியாதை.குப்பத்தில் இன்னும் கொடுமை.ஒருவன் எவ்வளவு மீன் பிடிக்கிறான்;அவன் படகு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துதான் அவனுக்கு மரியாதை.மீன்களை குவித்துக்கொண்டு வருபவனை "ஐய்யா!சாமி! கடலாத்தா கொட்டிக்கொடுத்திருக்காயா",என்று வாயெல்லாம் பல்லைக்காட்டிக் கொண்டு மீனவப்பெண்கள் விற்பதற்காக அந்த மீன்களை அள்ளுவர்.
ஆனால், கருப்பன் வலைக்கோ,புலுவுக்கோ இதுவரை ஐம்பது மீன்களுக்கு மேல் கிடைத்ததில்லை.அவன் கரை வந்தவுடன், அவன் படகைப் பார்த்துவிட்டு,"எங்கே இன்னிக்கு பொழுது மீன அள்ளிக்கிட்டானோனு தப்பா நெனச்சுட்டேன்டி",என்று ஏலனம் பேசிவிட்டு செல்வர்.அவன் மனைவி குப்பி மட்டும் கணவனை ஆசையோடு வரவேற்று,மீன்களை விற்று வருவாள்.அது ஒரு வேளைக் கஞ்சிக்குத்தான் வழி புகுக்கும்.மீதி இரு வேளையும் கணவனும் மனைவியும் ஒருவர் சிரிப்பில் மற்றொருவர் பசிதீர்த்து வாழ்ந்தனர்.அந்த நிலையில் குப்பி கர்ப்பமானாள்.மனைவியை அந்த அக்கரையில்லாத குப்பத்தில்விட மனமில்லாமல், சில நாட்கள் உடனழைத்துச் செல்வான்;பல நாட்கள் சீக்கிரம் திரும்பிவிடுவான்.
ஆனால்,அது பிரசவ நேரம்.அவன், அந்த ஏலனம் பேசும் கிழவிகளிடம் தன் ஆசை மனைவியை விட மனமில்லாமல்,உடன் அழைத்துச் சென்றான்.பாதி வழியில் அவளுக்கு பிரசவ வலிவந்து துடித்தாள்.கருப்பனுக்கு கையும் ஓடவில்லை;காலும் ஓடவில்லை.மனதில் தைரியம் வரவழைத்துக்கொண்டு தான் விதைத்த விதையை தானே அறுவடை செய்தான்.அவன் குழந்தையின் முகமும் அவனைப் போலவே கருநிறத்தில் இருக்கவே, "என் மவன் அப்படியே என் ஜாடை",என்று நினைத்து பெருமை கொண்டான்.
அவன் நெஞ்சம் கனத்தாலும், வேறு வழியின்றி குழந்தையை கடல்நீரில் குளிப்பாட்டினான்.கீழே குப்பியையும் குழந்தையையும் படுக்க வைத்து விட்டு,இவன் வலையை எடுத்தான்.அந்த பிறந்த மேனியை நோக்கி ஒரு பட்டாம்பூச்சி பாய்ந்து வருவதைக் கண்டு "பட்!போ!", என்று விரட்டிவிட்டு திரும்பினான். அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை.வலையெல்லாம் மீன்கள் துடித்தன."என் மவன் ராசிக்காரென்டி", என்று சொல்லிக்கொண்டே மனைவி அருகில் ஓடினான்.
மெல்லிய பயணம்-6
என் மெல்லிய பயணம் சற்று வேகம் குறைய ஆரம்பித்தது.எனக்கும் வயதாகாமலா போகும்? இறைவன் என்னைப்போன்ற பட்டாம்பூச்சிகளுக்கு சில நாட்களும் உங்களைப் போன்ற மனிதர்களுக்கு பல வருடங்கள் கொடுத்தாலும், நாங்கள் வாழும் உணர்ச்சியையும் நிம்மதியையும் நீங்கள் அடைய மாட்டீர்கள்.நூறு வயதில் இறந்தாலும் திருப்தியின்றி ஏதாவது ஒரு குறையோடுதான் போவீர்கள்.உங்களைக் கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.ஆனால் நீங்களோ "பாவம் பட்டாம்பூச்சி", என்று என் மீது அனுதாபம் காட்டுவது எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
நாங்கள் சிறிய உயிரினம் என்பதால் எங்களுக்கு சில நாட்களும் பெரிய உயிரினம் என்பதால் உங்களுக்கு பல வருடங்களும் இறைவன் தரவில்லை. நாங்கள் வாழ்க்கைப்பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுத்தேர்ந்திட சில நாட்கள் போதும். நீங்களோ வாழ்க்கைப்பாடம் பயில ஒரே வகுப்பில் பல வருடங்கள் இருப்பீர்கள்.அடடா! நான் உங்களை குறை சொல்வதாக எண்ணிவிடாதீர்கள்.சற்று சிந்தித்தால் நான் சொல்வதன் உண்மை உங்களுக்குப் புலன்படும்.
இதோ, இங்கு ஒரு இனிய இல்லம் தென்படுகிறது.வீட்டு ஜன்னலின் வழியே உள்ளே பறக்கிறேன்.என் வயதான விழிகளை நன்றாக விரித்துப் பார்க்கிறேன். மாமியாரும் மருமகளும் இவ்வளவு பாசமாக இருக்கிறார்களே! "அத்தை,இன்று பீட்ரூட் பொறியலும் முள்ளங்கி சாம்பாரும் செய்யட்டுமா?", என்று பவ்யமாக கேட்ட மருமகளிடம், "வேண்டாம் சந்திரா! உனக்கு ரத்தம் கம்மியாக இருப்பதால் டாக்டர் தினமும் கீரை சாப்பிடும்படி சொன்னாருல்ல? கீரைக்கூட்டு செய்", என்றார் அக்கரையான மாமியார்.
"இல்ல அத்தை; மாமாவுக்கும் அவருக்கும் கீரை என்றால் ஆகாது. எனக்காக சிந்து கீரை எடுத்து வருகிறாள்,நான் பார்த்துக்கறேன்", என்றாள் நல்ல குடும்பத்தலைவியாக.அதற்கு அவள் மாமியார் மெளன மொழியால்,விழியால் பாராட்டினார். சந்திரா அவசரமாக எங்கோ சென்றாள்.இந்த வீடுதான் அத்தனை அழகு! ரோஸி ஏஞ்சலின் வீட்டில் காணாத ஒரு இன்பமும் புனிதமும் இந்த வீட்டில் தெரிகிறது.இது என்ன அறை? கதவில் "PERSONAL PALACE" என்ற ஆங்கில அட்டை மாட்டப்பட்டிருக்கிறது. ம்! எனக்குதான் என்ன தடை?உள்ளே செல்வேன்.சென்றவுடன் சொக்கிவிட்டேன்.கிஷோர் குளித்துவிட்டு வந்தவுடன் நடமாடும் அலமாரியென நிற்கிறாள் சந்திரா.கையில் பெளடர்,காதில் சீப்பு,தோளில் சட்டை,சேலையில் சென்டினை சொறுகியிருக்கிறாள்.
பெளடரை அவன் கையில் கொடுத்துவிட்டு, சட்டையை மாட்டிவிடுகிறாள்.ஒவ்வொரு பட்டன் போடும்போதும்,"சாயங்காலம்வரை உன்னை எங்ஙனம் பிரிந்து இருப்பேன்? எவ்வளவு வேலை இருந்தாலும், என்னை நினைக்க மறக்காதே",என்பதுபோன்ற பார்வையையும் பரிசளித்தாள்.இப்பொழுது எனக்குப் புரிந்தது. "PERSONAL PALACE" என்பதைப் பார்த்து நான் உள்ளே சென்றிருக்கக் கூடாது.வெளியில் வந்தால் வேறொரு அறையில் தாமரைப்பூவின் உள் இதழ்போல் போர்வைக்குள் உறங்கும் ஒரு குட்டி தேவதை.அருகில் அங்குமிங்குமாக நான்கு பொம்மைகள்.
தண்ணீரில் பறக்கும் வாத்து சிறிது பறக்கும்;மீண்டும் நீந்தும்;மீண்டும் பறக்கும்.அது போல, அந்த குட்டி தேவதைத்தன் மெல்லிய இமைகளை திறந்தும் மூடியுமாய் மெதுவாக கண்விழிக்கிறாள். குழந்தை பிறக்கும்போது மட்டுமல்ல விழிக்கும்போதும் உச்சரிக்கும் முதல் சொல் "அம்மா". அந்த சப்தம் நிச்சயமாக சந்திராவில் காதுகளுக்கு எட்டியிருக்காது.ஆனாலும் "குழந்தை எழும் நேரமாகிவிட்டதே!", என்ற பதட்டத்துடன் ஓடி வந்தாள் தாய்.அதுதான் தாய்மையின் மகத்துவம்.
சற்று நேரத்தில் கணவர்,மாமனார்,குழந்தை அனைவரையும் அனுப்பிவிட்டு, "என்ன மீனா ரெடியா?", என்று ஒரு அறையின் கதவைத் தட்டினாள்.அந்த கதவு திறந்து வந்த பெண்ணைப்பார்த்ததும் கிஷோரின் தாய் இளமையில் இப்படித்தான் இருந்திருப்பார் என்று புரிந்தது."இதோ போகலாம் அண்ணி",என்றவளிடம், "உன் அழகுக் குறிப்புக்காக காலையில் வெறும் வயிற்றோடா கிளம்புவது?இதோ இந்த ஜீஸ் குடி", என்று அன்னையாக ஆணையிட்டால் அண்ணி.அடுத்த கனம் கிஷோரின் தாய் வழியனுப்ப, இரண்டு பறவைகளும் இரு சக்கரவாகனத்தில் புறப்பட்டன.ஆஹா! இப்படி வாழ்க்கையை அழகாக வாழும் மனிதர்களும் உண்டு என்பதைப் புரிந்து கொண்டே, அவர்கள் வேகத்தை மிஞ்சுமாறு நானும் வேகமாகப் பறக்கிறேன், என் மெல்லிய பயணத்தில்...
கதை-6
கல்லூரி நாட்கள்; மனிதன் உலக வாழ்க்கையில் சொர்க்கம் காணும் நாட்கள்.அது ஒரு பொறியியல் கல்லூரி.வாசலின் இரு புறங்களிலும் வாலிப விளையாட்டுகளோடு மாணவர்கள் இருப்பர்.ஆங்காங்கே சுடிதாரில் பறவைகள். ஒரு மரத்தின் கீழ் இரு காதலர்கள் அன்பாக சண்டை போட்டுக்கொண்டிருப்பர். எதிர்மரத்தின் கீழ் கூட்டமாக நண்பர்கள் நின்று அதைக் கேலிசெய்து சிரித்து ரசிப்பர். சிற்றுண்டி வளாகத்தில் உண்ண வரும் வயிறுகளைவிட எதிர்பாலரைக் காணவரும் கண்கள்தான் அதிகம்.நாணயமான மாணவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள்,கல்நெஞ்சுக்காரர்கள்,அடங்காதவர்கள்,அழகானவர்கள் என அந்த பூங்காவனத்தில் ரோஜாக்கள்,தாழம்பூமுதல் சப்பாத்திக்கல்லி,காட்டுப்பூ வரை அனைத்து ரகங்களுமுண்டு.பெண்களில் அமைதியானவர்கள்,தைரியசாலிகள், திமிரானவர்கள், தன்னலக்காரிகள்,அழகிகள்,அறிவாளிகள் என அதிலும் குறையே இல்லை.
அப்படிப்பட்ட கல்லூரியில்,இரு அருமைத்தோழிகளின் பெயர் சந்திரா,சூர்யா.அழகை அள்ளிக்கொண்டு பிறந்தார்களா இல்லை திருடிக்கொண்டு பிறந்தார்களா என்று தெரியாது.இதைத்தான் "கொள்ளை அழகு" என்று சொல்வார்களோ! இருவரும் நட்பாக இருக்கும் காரணம் அவர்களின் கொள்கை. புரட்சிப்பெண்கள் என்று கூறினால் மிகையாகாது. ஏழைகளுக்கு கல்வி புகட்டுவது,சேரிகளை சீர் படுத்துவது,கிராமிய பெண்களுக்கு தைரியம் புகட்டுவது, இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில் புரட்சி முழக்கம் செய்வது என இவர்கள் இருவரும் முழுநிலா என எப்போதும் பிரகாசித்தார்கள்.
இரு மின்னல்களும் சமுதாயத்தில் மட்டுமல்ல, காதலிலும் ஆர்வம் கொண்டவர்கள்.சூர்யா தினேஷும் சந்திரா கிஷோரும் அந்த கல்லூரி காதல் பறவைகளில் இருஜோடிகள்.இள இரத்தம் புரட்சி முழக்கம் செய்ய, வாலிப வயதோ காதல் ஏக்கம் தரும்.இந்த இரண்டு பழங்களையும் ஒரே அளவாக சுவைத்த இவர்கள்,படிப்பிலும் கெட்டிக்காரிகள்.நான்காம் வருடம் படிக்கையில்,சந்திரா,சூர்யா இருவர் வீட்டிலும் திருமண பேச்சு எடுத்தனர்.காதல் யுத்தம் நடந்தது.ஒருவழியாக இரண்டு ஜோடிகளும் இணைய நான்கு வீட்டிலும் பச்சை விளக்கு எரிந்தது.பெண்கள் முகம் மலர்ந்தது.
கிஷோரின் தாய் சந்திராவிடம் பாசமாகவே பழகினார்.சந்திரா வீட்டைவிட நாட்டைப் பற்றியே அதிகம் பேசுவதை அவர் கவனித்தார். பேச்சுவாக்கில், "திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்வாயா சந்திர?", என்றதற்கு, இவளோ,"புரட்சி வழியில் சென்று நிறைய சாதிக்க ஆசை அத்தை.மகளிர் மாநாடு ஒன்று கூட்டி முதலில் பெண்களுக்கு தைரியம் புகட்ட வேண்டும்.பிறகு ஆண்கள் குற்றவாளி ஆக மாட்டார்கள்", என உணர்ச்சிவசப்பட்டாள்.கிஷோர் தாயின் முகம் நெருப்பு பட்டாற்போல் வாடியது."உன் இலட்சியம் நிறைவேறினால், உன் குடும்பத்தில் உனக்கென்று இருக்கும் பொறுப்பை யார் கவனிப்பார்?",என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார்.
மறுநாள் சூர்யாவிடம் நடந்ததையெல்லாம் சொன்ன சந்திரா,"முதலில் நான் ஒரு பெண்,பிறகுதான் புரட்சிப்பெண்.என் குடும்பத்தை கவனிக்க முடியாவிட்டால் நான் சமுதாயத்தை எங்ஙனம் சீர்திருத்தப் போகிறேன்?", என்று தன் முடிவை சுற்றிவளைத்து சொன்னாள். சூர்யாவின் முகம் வாடியதைக் கண்டு,அவள் தோள்களில் கைவைத்து"என்ன சூர்யா?",என கேட்டாள்.
"நேற்று தினேஷ் வீட்டிலும் இதைப் பற்றித்தான் பேச்சு.ஆனால், தினேஷின் அப்பா என்னிடம் கோபமாக பேசிவிட்டார்.'எனக்கு விருது வாங்கும் மருமகள் வேண்டாம்.என் வீடு தேடி வருபவர்களுக்கு நல்ல விருந்து வைக்கும் மருமகளாக இரு', என அதட்டினார். உனக்குதான் என்னைப் பற்றித்தெரியுமே சந்திரா.தினேஷிடம் கண்ணீரும் அவர் தந்தையிடம் வெண்ணீரும் காட்டிவிட்டு வெளிவந்தேன், முழுமையாக",என்று சூர்யா சொல்லிமுடிக்க, இரு தோழிகளும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து ஆறுதல் அடைந்தார்கள்.அப்போது தொலைபேசி அடித்தது."கரியப்பட்டி கிராமத்தில் ஒரு பெண் தற்கொலை முயற்சி கொண்டாள்.அவளைக் காப்பாற்றி டெளன் ஆஸ்பத்திரியில் வைத்திருக்கோம். நீங்கள் இருவரும்தான் அவள் மனதைமாற்ற முடியும்",என்று பதட்டோடு ஒரு குரல் அழைத்தது. இருவரும் எழுந்தார்கள்."நீ இரு சந்திரா,நான் மட்டும் போய்வருகிறேன்",என்ற சூர்யாவின் விழிகள்,"நீயாவது நல்ல குடும்பத்தலைவியாக இரு",என்று வாழ்த்திவிட்டு புறப்பட்டது.
ஐந்து வருடங்கள் ஓடின.சந்திரா ஒரு கணினி துறையில் நல்ல வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் குழந்தைக்கு நான்கு வயது. சூர்யா நான்கு முறை "சிறந்த சமூக சேவை"க்கான விருதினைப் பெற்றாள்.அடிக்கடி தொலைப்பேசியும் அவ்வப்போது சந்திப்பும் இருவரின் நட்பிற்குப் பாலமாக அமைந்தது.அன்று இரவும் தொலைப்பேசி அவர்களுக்காக கூவியது.
மறுநாள் காலையில் கணவன்,குழந்தை,மாமனார் அனைவரையும் அனுப்பிவிட்டு, அவள் கிஷோரின் தங்கையோடு புறப்பட்டாள்.அப்போது காரில் சூர்யா செல்வதைப் பார்த்தாள்.நேரில் பேச நேரமில்லாததால்,விழிகளால் தோழியை வழியனுப்பினாள்.அப்போது அவள் உண்ர்ந்தாள்,"தனது சமுதாய அக்கறை அழியவில்லை;அடங்கியிருக்கிறது;இருந்தாலும் பயனில்லை",என்ற ஏங்கிய நேரத்தில்,அவளை ஒரு பட்டாம்பூச்சி முந்திச்சென்றது.
மெல்லிய பயணம்-7
சந்திராவின் வண்டியை கடந்த நான், ஒரு காரின் உள்ளே புகுந்தேன்.பெண்களில் நான்கு வகை சொல்வார்கள்.அதில்,பார்த்தவுடன் வணங்கும்படி செய்யும் விழிகள் கொண்ட தாரிகையைக் கண்டேன்.அந்த விழிகளில் ஒரு நெருப்பு தெரிந்தது. அந்த நெருப்பு தீபமாகி வெளிச்சமும் தரும் தேவைப்பட்டால் தீப்பந்தமாகி தீயசக்திகளை அழிக்கவும் செய்யும் என்பது புரிந்தது.
அவளருகே சற்று பயத்துடனே சென்றேன்.அவள் கைகளில் ஒரு அழகனின் புகைப்படம்.இவள் பார்வை காதலில் ஸ்வாரஸ்யத்தைக் காட்டவில்லை.தீராத ஏக்கத்தை வெளிப்படுத்தியது. அவள் என்னை கண்டுகொண்டாள்.என்னை அவளது வீரமான கரங்களில் ஏந்தி,"மனம்தான் எத்தனை மாயை காட்டுகிறது?நீ என் நிலையில் இருந்திருந்தால் காதலை விட்டிருப்பாயா? உன் லட்சியத்தை,கோடி மக்களின் சந்த்தோஷத்தை விட்டிருப்பாயா?", என்றாள்.நான் என் சிறகுகள் அடித்து பறக்காமல் இருந்தேன்.அவள் ஏனோ புன்னகைத்தாள்."குழந்தைகள் காப்பகம் வந்துவிட்டது மேடம்",என்ற குரல் கேட்டு நாங்கள் இறங்கினோம்.அந்த தேவாலயம், அதனோடு இணைந்திருந்த குழந்தைகள் காப்பகம்,இங்குதான் பாதரியார் தாமஸ், ஆனந்த்,..ஆ...ஆம்..அதே இடம்தான்.
மகிழ்ச்சியில் பற்ந்தேன்.வெள்ளை ஆடையில் திரும்பி நின்றிருந்த பாதரியாரின் தோளில் ஏறினேன்."இது வேறு தோள்கள்..."அப்போது அதே கரங்கள் என்னை அள்ளியது.என் கண்களுக்கு உலகமே தலை கீழாகத்தெரிந்தது.அந்த அழகன்....அகிலன்...இன்று இந்த உடையில், பாதரியாராக.அமைதியாக பூக்கள்மீது அமர்ந்து கவனித்தேன்.
"நன்றி சூர்யா!எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை",என்ற அகிலனிடம்,"எனக்கு பாதரியார் ஜோசப்பின் ஆசிகள் போதும்",என்றாள் சிரித்துக்கொண்டே. யாரந்த பாதரியார் ஜோசப் என்று என் கண்கள் சுற்றிக்கொண்டிருந்த போது,அகிலன் தன் கரங்களால்,அவள் நெற்றியில் சிலுவை வரைந்து "இறைவா!இக்குழந்தையை இரட்சிப்பாயாக!", என்று வாழ்த்த நான் ஆனந்தக் கண்ணீர் ததும்ப நின்றேன்.
அப்பொழுது அங்கு இருந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தனது சக்கரவண்டியில் வந்து மிட்டாய் வழங்கிய ஆனந்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். அந்த தேவாலயத்தின் காவல்காரன் கைவணங்கி பேசிக்கொண்டே வந்தான்."அன்னிக்கு என் பொண்டாட்டிய அடிச்சப்போ,நீங்க வந்து என்ன திருத்தினதால தான் இன்னிக்கு நான் திருந்தி வாழுறேன். புள்ளைக்குட்டியோட சந்தோசமா இருகேன்மா",என்று மனதார நன்றி சொன்னான். இப்பொழுது எனக்குப் புரிந்தது.இந்த விழிகள் எங்கெல்லாம் தீபமாகி இருக்கிறது, எங்கெல்லாம் தீப்பந்தமாகி இருக்கிறது என்று. சூர்யாவின் பாதங்களுக்கு முத்தமிட்டேன். நான் நசுங்கிவிடுவேனோ என்று பயந்து என்னை மென்மையோடு எடுத்து பறக்கவிட்டு, அவள் தனது தேன்போன்ற குரலில் அனைவரிடமும் அன்பு மொழி பேசிக்கொண்டிருந்தாள்.மகிழ்ச்சியோடு நான் பறக்க ஆரம்பித்தேன்.என் மெல்லிய பயணம் சுவாரஸ்யமாகத் தொடர்கிறது...
கதை-7
நடேசனின் ஒரே மகள் சூர்யா.ஒரே மகளுக்கு பொதுவாக செல்லம் அதிகமாக இருக்கும்.ஆனால்,நடேசன் தனது மகளுக்கு வீரம்,பொறுப்பு, தைரியம் போன்ற குணங்களை விதைத்திருந்தார்.அவள் வளர வளர, சமூகத்தின் மீது அவள் கொண்டிருந்த அக்கரையும் வளர்ந்தது. தீய செயல்கள் என்றால் அவள் புயலாகிவிடுவாள்.தனது மனசாட்சி தவிர வேறு யாருக்கும் பயப்பட மாட்டாள்.அவள் கல்லூரியில் அவளுக்கு அமைந்த தோழி சந்திராவும் எண்ணங்களில் இவளைப் போலவே இருந்தாள்.இரு தோழிகளும் ஒருவரையொருவர் ஊக்குவித்து தங்கள் சமுதாய ஆர்வத்தை கொள்கையாக மாற்றினார்கள்.வாழ்க்கை முழுவதும் பிறருக்கு நன்மை செய்து வாழ முடிவெடுத்தார்கள்.
ஆனால், ஒரு கட்டத்தில் சந்திரா குடும்ப சூழ்நிலையில் வாழ முற்பட்டாள். சூர்யா தன் காதலையும் தனது கொள்கைக்காக தியாகம் செய்தாள்.அவள் மகளிர் அணிகளுக்கு செல்வாள்; அங்கு ஊழலோ ஊழல்.நற்கொடை என்ற பெயரில் சில பெண்கள் பணத்தை சூறையாடியதைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு நல்ல பாடம் கற்பித்தாள்.பிறகொரு நாள், ஒரு குடிகாரன், பூவிற்துக் கொண்டிருந்த அவன் மனைவியை அடித்துக் கொண்டிருந்தான்.ஆண்களிடம் அடிமையாகாத பெண் சூர்யா; என்றாலும் ஆண்களை அடிக்கும் செயல் பெண்மைக்கு அழகல்ல என்ற எண்ணம் கொண்டவள்.
ஆனால், குடிகாரர்களை அவள் மனிதர்களாகவே மதித்ததில்லை.அவளுக்கு அந்த குடிகாரனின் மனைவி மீதுதான் கோபம் வந்தது. அந்த பூக்காரப் பெண்ணிடம்,"என்ன,உன் புருஷன் உனக்கு தெய்வமா? கல்லானாலும் கணவன் தான்.ஆனா,அந்த கல்லிற்குத் தகுதி இருக்குதானு பார். இந்த மாதிரியான ஆளுங்களுக்காக உன் வாழ்க்கையை அழிச்சுக்காத",என்றாள் ஆவேசத்துடன்.அழுது கொண்டிருந்த அந்த பெண் கண்ணீர் சுரப்பதைவிட்டு சிந்திக்கும் பார்வையோடு அவளது குடிகார கணவனை நோக்கினாள்.
சூர்யா, "சாம வேத தான தண்டம்", என்ற நான்கு ஆயுதங்களில் "தண்டம்", அதாவது தண்டனையை கையாண்டாள்.அதன் பயன் அவனது மகள் பூ கட்டுவதை விட்டுவிட்டு பள்ளிக்கூடம் சென்றாள்.ஏனென்றால், அவனை திறுத்திய சூர்யா, அவனுக்கு குழந்தைகள் காப்பகத்தில் காவல்காரன் வேலையையும் வாங்கிக் கொடுத்தாள்.
இது போன்ற சேவைகள் பற்பல செய்த சூர்யா, ஒரு குடும்பத்தலைவியாக இருந்திருந்தால், இத்தனை வீரமாகவும் பயமில்லாமலும் இருப்பது கடினம் என்று புரிந்துதான் அந்த முடிவை எடுத்திருந்தாள்.ஆனால், அன்று அவள் மீனாவுடன் சென்ற சந்திராவை கண்டதும், தான் துறந்த வாழ்க்கைக்காக ஒரு கனம் ஏங்கினாள்.
தனது கைப்பையில் இருந்த தினேஷின் புகைபடத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு முறை தினேஷும் இவளும் திரைப்படம் சென்ற போது,"இதோ ஒரு நிமிடம்பிடி",என்று அவன் பர்ஸைக்கொடுத்தான்.அப்போது அவள் உரிமையோடு திருடிய புகைப்படம்தான் அது.கல்லூரி நாட்களில் தினேஷுடன் பேசிய இனிய நேரங்களை நினைத்து பார்த்தாள்.பெருமூச்சுவிட்டாள்.
இரண்டு வருடங்களுக்கு முன் அவள் ஒரு விழாவில் தினேஷைப் பார்த்தாள்.அவன் அச்சாக அந்த பெண்ணின் கையில் இரண்டு வயது குழந்தை. "இவள் கல்யாணி,என் மனைவி. மகன் சூர்யபிரகாஷ்", என்று அவன் சொல்லிவிட்டு, அவன் மனைவியிடம்,"நான் சொன்னேனே சூர்யா. இவங்க தான் ", என்றான், அவள் கண்களை நேரே நோக்காமல். சூர்யாவோ சூர்யபிரகாஷ் என்ற பெயர் கேட்டவுடன் ஆடிப்போனாள். அந்த குழந்தையை அள்ளி முத்தமிட்டாள்.விழா முடியும் வரை கல்யாணியோடுதான் இருந்தாள்.இதையெல்லாம் இன்று
நினைத்து கண்கள் கலங்காமல் அடக்கிக்கொண்டாள்.அப்பொழுது தினேஷின் புகைப்படத்தின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளில் ஏந்தினாள்.அதனோடு மனம்திறந்து பேசினாள்,அதற்கு புரியாது என்ற நம்பிக்கையில்...
மெல்லிய பயணம்-8
மனிதர்களின் மகத்துவம் பற்றி யோசித்துக் கொண்டே பறக்கிறேன்.உலகம் எத்தனை அழகானது!அதில் எத்தனைவகை உயிர்கள் உண்டு! இயற்கை அன்னையின் தாலாட்டுதான் எவ்வளவு சுகமானது! தரையில் சுவாசிப்பதற்கும் ஐந்நூறு அடிகள் மேல் சென்று சுவாசிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் படைத்திருக்கிறான் இறைவன்! தோழிகளோடு பறப்பது ஒரு சுகம் என்றால்,தனிமையும் மிகவும் சுகமானதுவே! பிள்ளை வயது,பருவ வயது,பாலிய சிநேகம் அனைத்தும் கண்டு,கடந்து வயதாகிய பிறகும் என் அழகை ரசிக்கும் மனிதர்கள்.வியப்பாக இருக்கிறது.
எனது இந்த சிறிய வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம். காதல் தோல்வியினால் தன் வாழ்க்கையை தானே வீணாக்கிய அகிலன்; அவனையும் சீர்படுத்திய புதுமைப்பெண்ணாகிய சூர்யா;குடும்பத்தை கோவிலாக்கிய சந்திரா;தனது ஊனம் உடலில் இல்லை,மனதில்தான் இருக்கிறது என்று உணர்ந்து சாதித்து காட்டிய ஆனந்த்;அவனுக்கு அதை புரிய வைத்த பாதரியார் தாமஸ்.அனைவருக்கும் நல்லதே நினைத்த முத்துராசுத்தாத்தா; அவர் பூ வைப்பது தன் நன்மைக்காக என்பதைகூட புரிந்து கொள்ளாத வெட்டியான்; பணத்தால்தான் பாசத்தை காட்ட முடியும் என்று எண்ணிய மனோகர்; ஆணவம் கொண்டிருந்த ரோஸி;அவளின் தேவதை போன்ற தங்கை ஏஞ்சல்;ஏழ்மையிலும் மனைவி குழந்தை மீது பாசம் வைத்து நம்பிக்கையோடு வாழ்ந்த மீனவனின் வாழ்க்கை; அனைத்தையும் நினைத்து வியக்கிறேன்; இல்லை இல்லை... ஏன் இவற்றை எல்லாம் நினைக்கிறேன் என்றே வியக்கிறேன். எனக்கு என்னவோ நடக்கிறது.
திரும்பிப் பார்த்தால், அது ஒரு பெரிய ஆராய்ச்சிக் கூடம்.இந்தியாவின் தேசியக்கொடி கம்பீரத்தோடு பறந்து கொண்டிருந்தது.ஆனால், இந்தியாவின் சுதந்திரமான பட்டாம்பூச்சிகளில் ஒருத்தியான நான், இங்கு வெள்ளை ஆடையும் பச்சை முகமூடியும் போட்ட ஆட்களிடம் மாட்டிக்கொண்டேன். பறக்கும் போது பிடிக்க முடியாத என்னை, நான் சிந்தனையில் ஆழ்ந்த நேரம் பார்த்து பிடித்துவிட்டார்கள்.என்ன மனிதர்க்ள் இவர்கள்? கொடியவர்கள் என்று நினைத்தால் தடவிக் கொடுக்கிறார்கள்.நல்லவர்கள் என்று நினைத்தால்,பிடித்து வைக்கிறார்கள்.அடேய்! வெள்ளை சட்டை போட்ட கருகரு எமனே!இது என்ன, கத்தி போன்ற ஆயுதமெடுத்து ஏன் என்னை நோக்கி வருகிறாய்?என்னை யாராவது காப்பாற்றுங்கள்! நான் சிறகடிப்பது தெரியவில்லையா?
என் விழி கண்ணீர் கசித்தது.ம்!சரி! எனது முடிவு எனக்கு புரிந்து விட்டது.கடைசி நிமிடம் நிம்மதியாக இருந்துவிட்டு போகலாமென்று முடிவு செய்தேன். சிறகடித்து துடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கழுத்தைக் காட்டினேன்.கண்கள் உயர்த்தி பார்த்ததில்,தேசிய கொடி மட்டுமே தெரிந்தது.என் மெல்லிய பயணத்தில் நான் உச்சரிக்கும் கடைசி வார்த்தை "ஜெய்ஹிந்த்!!!"
கதை-8
அது உலகின் பார்வையில் இந்திய அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சிறப்பான பெயர் தந்த இடம்.அங்கு பல கண்டுபிடிப்புகள்.பல ஆராய்ச்சிகள்,பல தோல்விகளும் கூட.அந்த இடதிற்கு புதிதாக ஒரு சவால்.நாட்டில், ஏதோ கோழியின் பெயர் கொண்ட கொடிய நோய் பச்சை குழந்தைகள் முதல் பழுத்த மரம்வரை அனைவரின் உயிரையும் சூறையாடிக்கொண்டு இருந்தது.மேலும் இந்த நோய் தாக்கியதால், பலரது கைகால்கள் நிரந்திர ஓய்வு பெற்றுவிட்டன. "ஓ!!" என்ற கூச்சல்களும் அழுகைச்சத்தமும் நிறைந்த அனைத்து மருத்துவமனைகளின் தேவையும் அந்த நோய்க்கான மருந்துதான்.
அதற்காக, பல ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் நடத்தி பல வகை மருந்துகள்,சில மாத்திரைகள்,பல ஊசிகள் கண்டுபிடித்தனர்.ஒருசில மருந்துகள் வலியைக் குறைத்தன.சிலவை மரணத்தை சில நாட்கள் தள்ளிப்போட்டன.ஆனால், எந்த ஒன்றும் பூரண குணம் தரவில்லை. எலிகளைக் கொண்டும், பறவைகளைக்கொண்டும் ஏதேதோ செடிகளைக்கொண்டும் அவர்கள் ஆராய்ச்சி செய்தபோது, "பட்டாம்பூச்சியின் இரத்ததை 'electrophorosis' என்ற முறைப்படி சுத்தம் செய்து, அதை சூடாக்கி, அவர்கள் செய்து வைத்திருந்த கலவையில் சேர்த்து, பிறகு ஒரு வாரம் கழித்து அதை மாத்திரை ஆக்கினால், பலன் கிடைக்கலாம்", என்று ஒரு விஞ்ஞானி கூறவே, அங்கிருந்த பெரிய படிப்பு படித்தவர்களெல்லாம் பட்டாம்பூச்சியைத் தேடினர்.
ஒருவர் கையில் அகப்பட்ட பட்டாம்பூச்சியை "Bisection" என்ற முறைப்படி இரண்டாக பிளந்து, அனைத்து ஆய்வுகளும் முடித்து, மாத்திரையாக்கி, அந்த நோயினால் தாக்கப்பட்டு இவர்கள் சோதனைக் கூண்டில் இருந்த எலி ஒன்றிற்கு கொடுத்தனர். மூன்று நாட்கள் வரை அந்த எலியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை.மூன்றாவது நாள்,அறிஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, "க்ரீச்!!க்ரீச்!!", என்ற எலியின் சப்தம் கேட்கவே, எலி இருந்த கூண்டின் அருகில் விரைந்தனர்.எலியின் முகத்தில் பழைய உற்சாகம் தெரிந்தது.அறிஞர்கள் முகத்திலும்தான்.
பல மாதங்களுக்கு பிறகு, "சளி இருமல் இருந்தால் 'கோரக்ஸ்' குடிக்க வேண்டும்,காய்ச்சல் என்றால் கால்பால் போடவேண்டும்,சிக்கன் கூனியா வந்தால் பட்டாம்சின் போடவேண்டும்",என்று மகளை விடுதிக்கு அனுப்பும் தாய் அக்கரையோடு கூறிக்கொண்டிருந்தாள்.ஒரு வருடத்திற்கு முன்பு பெயரைக் கேட்டாலே பயந்த மனிதர்கள், இன்று காய்ச்சல்,சளி போல இதையும் சாதாரண நோயாகக் கருதுகிறார்கள்.அத்தகைய கொடிய நோயையும் சாதாரண விஷயமாக்கிய பட்டாம்சின் என்ற மாத்திரை எவ்வளவு மகத்தானது என்று உலகிற்கே தெரியும்.அந்த பட்டாம்பூச்சியின் கதையும் அதன் மெல்லிய பயணங்களும் உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.:-)
Monday, December 10, 2012
Sunday, December 09, 2012
Prawn masala...
This is supposed to be the first blog from me on cooking hence starting with my favorite and others favorite too :)
Ingredients -
Prawns peeled (small or medium) - 1/2 kg
onion big 2 ( finely chopped)
tomato big 1 finely chopped
oil , sombu , green chilly , salt, ginger garlic paste - as required
Step 1 : mix prawns with chilly powder , salt , 1 spoon ginger garlic paste and keep aside for minimum 2 hours
Step 2 : Heat 200 ml oil in a pan and fry these prawns to golden brown color and keep aside
Step 3 : Heat 3 spoons oil in frying pan and add sombu curry leaves once fried add 3/4th of chopped onion , let it turn mild brown add 1/2 of tomatoes
Step 4 : While the tomato onion fry is ongoing make burner in simmer and make a quick paste of the remaining onion and tomato little chilli powder , 1/2 tea spoon salt , 1/2 green chilly, pinch of ginger garlic as well ...
Step 5 : Mix the paste in the onion tomato fry and after 2 mins add the golden brown prawns to this masala...
Step 6 : Sprinkle few drops of water , stir the content and close with a lid for approx 4 to 5 mins...
Step 7 : Once the masala is ready serve with coriander decoration ;) if required add lemon drops ...
Step 8 : Taste and eat well ;)
Ingredients -
Prawns peeled (small or medium) - 1/2 kg
onion big 2 ( finely chopped)
tomato big 1 finely chopped
oil , sombu , green chilly , salt, ginger garlic paste - as required
Step 1 : mix prawns with chilly powder , salt , 1 spoon ginger garlic paste and keep aside for minimum 2 hours
Step 2 : Heat 200 ml oil in a pan and fry these prawns to golden brown color and keep aside
Step 3 : Heat 3 spoons oil in frying pan and add sombu curry leaves once fried add 3/4th of chopped onion , let it turn mild brown add 1/2 of tomatoes
Step 4 : While the tomato onion fry is ongoing make burner in simmer and make a quick paste of the remaining onion and tomato little chilli powder , 1/2 tea spoon salt , 1/2 green chilly, pinch of ginger garlic as well ...
Step 5 : Mix the paste in the onion tomato fry and after 2 mins add the golden brown prawns to this masala...
Step 6 : Sprinkle few drops of water , stir the content and close with a lid for approx 4 to 5 mins...
Step 7 : Once the masala is ready serve with coriander decoration ;) if required add lemon drops ...
Step 8 : Taste and eat well ;)
Subscribe to:
Posts (Atom)